ராமாயணா' படத்தைப் பார்த்து வியந்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.இந்திய சினிமாவில் இப்படி ஒரு காட்சியா! வைரல் விமர்சனம்!
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் இயக்குனர் ஷங்கர். கற்பனைக்கு எட்டாத விஷுவல் பிரம்மாண்டங்களை திரையில் காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அவர், தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள நிதேஷ் திவாரியின் இதிகாச திரைப்படமான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ (Ramayana: Rise of a Legend) படத்தை பார்த்துவிட்டு மனம்திறந்து பாராட்டியுள்ளார்.

"இந்திய சினிமாவில் இதுவரை இப்படிப்பட்ட விஷுவல் காட்சிகளை நான் பார்த்ததே இல்லை" என்று ஷங்கர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனம், இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி டிரெண்டாகி வருகிறது. இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப வித்தகரிடமிருந்தே இப்படி ஒரு பாராட்டு கிடைத்துள்ளது படக்குழுவினரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகத் தரத்தில் உருவான ராமாயணா!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில், ஸ்ரீராமராக ரன்பீர் கபூரும், அன்னை சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷும் நடித்துள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வி.எஃப்.எக்ஸ் (VFX) பணிகளை உலகப் புகழ்பெற்ற ‘டிஎன்இஜி’ (DNEG) நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னின்று கையாண்டுள்ளனர்.
படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டதாவது:
"#Ramayana – என்னவொரு பிரம்மாண்டம்! இந்திய சினிமாவில் இதுவரை இப்படி ஒரு விஷுவல் காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அட்டகாசமான வி.எஃப்.எக்ஸ், பிரம்மாண்ட தயாரிப்பு தரம், அசத்தலான லுக் அண்ட் ஃபீல், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மரின் மிரட்டலான இசை மற்றும் அதிரவைக்கும் சவுண்ட் டிசைன்!"
மேலும் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராக்ஸ்டார்’ யாஷைப் பாராட்டிய ஷங்கர், "ஒவ்வொரு பிரேமிலும் யாஷைப் பார்ப்பது அத்தனை ரசிக்க வைக்கிறது. அவர் ஒரு 'லவபிள் வில்லன்' (Lovable Villain); தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மிகப்பெரிய கைதட்டல்கள்" என்று பதிவிட்டுள்ளார். ஷங்கரின் இந்த நெகிழ்ச்சியான பாராட்டிற்கு இயக்குனர் நிதேஷ் திவாரியும், "மிக்க நன்றி சார்" என பணிவுடன் பதிலளித்துள்ளார்.
சிகர்களின் ரியாக்ஷன்: இணையத்தில் வெடித்த கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கும் வி.எஃப்.எக்ஸ் மேஜிக்கிற்கும் பெயர் போனவர் ஷங்கர். 'எந்திரன்', '2.0' போன்ற பிரம்மாண்ட படைப்புகளை இயக்கிய ஒரு மேஸ்ட்ரோவிடமிருந்தே இப்படி ஒரு சான்றிதழ் கிடைத்திருப்பதை ரன்பீர் மற்றும் யாஷ் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
“விஷுவல் கிங் ஷங்கரே பாராட்டிவிட்டார் என்றால், படத்தின் விஷுவல் தரம் எந்த அளவில் இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள்!” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, யாஷை "லவபிள் வில்லன்" என ஷங்கர் வர்ணித்த வாசகம் இணையத்தில் வைரல் மீம்ஸாகவும், ரீல்ஸாகவும் கொடிகட்டிப் பறக்கிறது. சர்வதேச இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் நமது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் கூட்டணியைப் பாராட்டியிருப்பதும் இசைப் பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ப்ரிஸ்வா பார்வை
இயக்குனர் ஷங்கரின் பாராட்டு என்பது சினிமா வட்டாரத்தில் சாதாரண விஷயம் கிடையாது. இந்திய சினிமாவில் கிராபிக்ஸ் மற்றும் பட்ஜெட் சாத்தியக்கூறுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே உலக அளவிற்கு உயர்த்தியவர் அவர். அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்ப மேதை, ஒரு படத்தின் விஷுவல்ஸை இந்திய அளவில் "இதுவரை பார்க்காத ஒன்று" என்று வியந்து கூறியிருப்பது 'ராமாயணா' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய சினிமா ஹாலிவுட்டின் மார்வெல், டிசி படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாகி வருகிறது என்பதற்கு ஷங்கரின் இந்த விமர்சனமே ஆகச்சிறந்த சான்று!